Monday, December 24, 2007

404. குஜராத்தில் மோடியின் மகத்தான வெற்றி

நான் எனது இப்பதிவில் எழுதியது போலவே, மோடி குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். ஆனால், ஆட்சியில் இருந்த ஒரு முதல்வர் anti-incubency-க்கு எதிராக இத்தகைய மகத்தான வெற்றியைப் (117/182) பெறுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது! நான் இதை மோதித்துவாவுக்கு (இந்துத்வா + பொருளாதார முன்னேற்றம்) கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

பிஜேபியில் இருந்து கொண்டே குழி பறித்த கேசுபாய் போன்றவர்கள் மூஞ்சியில் மோடி நன்றாக கரியைப் பூசி விட்டார். அது போலவே, ஊடகத்துறையில் உலவும் போலி அறிவுஜீவிகள் (மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு) அளித்த முன்முடிவுகள், கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றையும் மோடியின் மகத்தான வெற்றி பொய்யாக்கி விட்டது.

குஜராத் வன்முறையின்போது, மோடியின் அரசு வன்முறைக்கு துணை போனது மறுக்கமுடியாத ஒன்று என்றாலும், மோடி மாநிலத்தை திறமையாக நிர்வகித்து, முதலீடுகளை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சிக்கு அடி கோலியதின் மூலம், பெருவாரியான மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார் என்பதும் மறுக்க முடியாத ஒன்றே! மோடி வெற்றி பெற்றது, மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வழி வகுக்கும். ஏனெனில், வளர்ச்சிக்கு Contuinity மிக அவசியம்.

அது போலவே, பெரும்பாலும் ஊழலற்றதொரு நிர்வாகம் (நம் நாட்டில் இது மிகப்பெரிய விஷயம்!) ஏற்படவும் மோதி காரணமாக இருந்துள்ளார்! எவ்வித சார்பும் இல்லாத ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று, குஜராத்தின் 12% வளர்ச்சி மற்றும் அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு குறித்துப் பேசுவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் குஜராத்தில் ஆட்சி செய்தபோது தான், ஊழல் அங்கு மலிந்திருந்தது.

நான் கூட, இம்முறை காங்கிரசுக்கும், மோடிக்கும் சரியான போட்டி இருக்கும் என்றும், குறுகிய பெரும்பான்மையில் தான் மோடி ஆட்சிக்கு வரக்கூடியது சாத்தியம் என்றும் எண்ணினேன். மோடியை "மரணத்தின் வியாபாரி" என்று அழைத்த சோனியாவின் காங்கிரசுக்கு இப்படி ஒரு மரண அடி குஜராத் மக்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை!

அதோடு, ராகுல் காந்தி, கட்சிக்கு புத்துயிரும், பலமும் தந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு உடைந்ததும் நல்லதுக்குத் தான். பரம்பரை / வாரிசு அரசியல் காங்கிரஸில் ஒழிய வேண்டும், அப்போது தான் கட்சி உருப்படும்! காங்கிரஸின் அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும் backfire ஆனது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவரை எள்ளி நகையாடுவதற்கும், சிறுமைப்படுத்துவதற்கும் ஒரு அளவு வேண்டும் என்பதை சோனியாவும், இன்னும் சிலரும் புரிந்து கொண்டிருப்பார்கள்!

அடுத்த வருடத்திலேயே பாராளுமன்றத் தேர்தலை நடத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைமையின் எண்ணத்தை மோடியின் வெற்றி மாற்றி விட்டது. இனி, அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய பேச்சும் இருக்காது, 2008-இல் தேர்தல் என்ற பேச்சும் கிடையாது :) அது போலவே, அடுத்த தேர்தலில் ராகுலை பிரதம மந்திரி வேட்பாளாராக அறிவிப்பது குறித்தும், காங்கிரஸ் யோசிக்க வேண்டியுள்ளது! என்னளவில், ராகுல் காந்திக்கு பிரதமராக வருவதற்கு உள்ள தகுதியை விட மோடிக்கு குஜராத்தின் முதல்வராகத் தொடர்வதற்கு தகுதி இருப்பதாகவே எண்ணுகிறேன்.

அதே நேரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதும் உண்மையே. நேற்று தொலைக்காட்சியில் அம்மக்களில் சிலர் சொன்னதின் சாரம் இது தான்: "நாங்கள் 2002-ஐ மறந்து, முன் நோக்கி வாழவே விரும்புகிறோம். எங்களுக்கு நியாயமும், உரிய நஷ்ட ஈடும் கிடைக்க வேண்டும்".

நரேந்திர மோடி, தான் ஒட்டு மொத்த குஜராத்தின் முதல்வர் என்பதை மறந்து விடாமல், அடுத்த 5 ஆண்டுகளில், எல்லாரையும் அரவணைத்து, குஜராத்தில் எல்லா தரப்பு மக்களும் அச்சமின்றி உரிமையோடு வாழவும், பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் அடையவும் வழி வகுத்து, நல்லாட்சி வழங்குவாரேயானால், அவரது கடந்த கால கறைகள் (நடந்து முடிந்ததை யாரும் மாற்ற முடியாது!) மறைவதோடு, மோடியின் அரசியல் எதிர்காலமும் பிரகாசமாக அமையும் ! நம்புவோம் !!!

ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்!

எ.அ.பாலா

22 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஆமா,மோதியின் வெற்றி பெருதான்.அவர் காங்கிரஸ்,இடதுசாரிகளை மட்டும் எதிர்த்து வெற்றிபெர்றவில்லை பிஜேபி-ஐ எதிர்த்தும் வெற்றிபெற்றிருக்கிறாரே -)

said...

"குஜராத் வன்முறையின்போது, மோடியின் அரசு வன்முறைக்கு துணை போனது மறுக்கமுடியாத ஒன்று என்றாலும்,"

குஜராத்தில் என்ன நடக்கிறது என தெரிந்து கொண்டு எழுதவும்...குஜராத் இந்து, முஸ்லிம் கலவரமென்பது இன்று நேற்றூ ஏற்பட்டதல்ல..தொன்று தொட்டு நடந்து வந்த ஒன்றுதான்..இந்தக் கலவரங்களை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருந்தது. அதனை மாற்ற முயன்ற குஜராத் பெருவாரி ஹிந்துக்களளின் ஆதரவை பாஜாகா வரிந்து கொண்டு ஆட்சியைப் பிடித்தது. மோடி கலவரத்தை ஆதரித்தாரென்றால்- அவர் சார்ந்த கட்சி மற்றும் கொள்கை அது மாதிரி.அவ்ர் ஒன்றும் மறைமுக ஆதரவு கொடுக்கவில்லை.மற்றும் அந்தக் கொள்கை அங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடையது எனில் அதை கேள்வி கேட்க மற்றவர் யார்?

கலவரம்/கொடுமைகள் பற்றி பேசும் உங்களுக்கு ஒன்று மறந்து விட்டது..குஜராத்தின் ஒவ்வொரு கலவரத்தின் முன்னும் ஒரு triggering point இருந்திருக்கிறது...2002 ல் கோத்ரா ரயில் எரிப்பு.ஒரு பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரான கலவரத்தில் ரெடார்டேசன் அதிகம் இருக்கத்தான் செய்யும்.அந்த ரெடார்டேசனின் பயன் 2002 முதல் 2007 வரை ஐந்தாண்டுகளில் குஜராத்தில் எந்தக் கலவரமும் இல்லாமல் இருந்தது.அனைத்து சிறுபான்மையினரும் பயத்தில் வாழ்கின்றனர் என்று கப்சா விடுவதாயிருந்தால்,அதற்கு பதில் ஆட்சி கையிலிருந்தும் , பெரும்பான்மை மக்களின் சப்போர்ட் இருந்தும் தானாக வலிய எந்த அசம்பாவிதத்தையும் ஹிந்துக்களோ அல்லது அரசாங்கமோ துவக்கவில்லை அல்லது தூபமிடவில்லை என்பதை மனத்தில் கொள்ளுங்கள்.

மெஸேஜ் : நீ அமைதியாக என்வழியில் குறுக்கிடவில்லை எனில் நானும் உன் வழியில் குறுக்கிட மாட்டேன் என்பதே.

இந்த அமைதிதான் குஜராத் மக்கள் எத்ர்பார்த்ததும், பார்ப்பதும். இத்துடன் சேர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நல்ல ஆட்சியும் கொடுத்த மோடி அரசு வெற்றி பெறாமல் என்ன செய்யும்?

குஜராத்தில் நடப்பது சிறுபான்மையினருக்கு எதிரான கலவரமெனில் " ஜாதி எதிர்ப்பு என்ற பெயரில் " இங்கு ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர்களை மட்டும் குறி வைத்து ஓட்டுப் பொறுக்கி அரசியல் செய்யும் கழக லாவகத்தை எந்தக் கொடுமையில் சேர்ப்பது ?

dondu(#11168674346665545885) said...

இந்தியாவில் எந்த மானிலத்திலும் இல்லாத வகையில் 100% கிராமங்களுக்கு மின்னளிப்பு, நல்ல சாலைகள், குடிதண்ணீர் வசதிகள், நல்ல விளைச்சல் ஆகிய எல்லாமே கடந்த பத்து ஆண்டுகளில் மோதி அரசின் சாதனைகளாகும். மக்கள் வோட் போட்டார்கள் என்றால் அவர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல.

ஏற்கனவே 2002 குஜராத் கலவரங்களைப் பற்றி பேசித்தான் எதிர்க்கட்சி பிரச்சாரம் செய்தது. மறுபடி இந்தத் தேர்தலுக்கும் அதே பிரச்சாரம் என்றால் 1984-ல் காங்கிரஸ் நிகழ்த்திய சீக்கியக் கலவரங்களுக்கு என்ன பதில்? அதை மட்டும் சௌகரியமாக மறக்கின்றனரே.

விஷயம் என்னவென்றால் டெஹல்கா டேப்புகளை போட்டு பார்த்து விட்டனர். ஆனால் அதே சமயம் அதில் பெயரிடப்பட்ட, பா.ஜ.க.வை விட்டு விலகியவர்களுக்கு தேர்தலில் நிற்க டிக்கெட்டும் தந்தனர். ஆக காங்கிரஸ் தனக்கு சொந்தச் செலவிலேயே சூன்யம் வைத்து கொண்டது அவ்வளவுதான்.

போதாததற்கு தலைமை தேர்தல் ஆணையரின் பாரபட்ச நடவடிக்கைகள் வேறு. எல்லாவற்றையும் மீறித்தான் மோடி ஜெயித்தார்.

ஆகவே இது மகத்தான வெற்றியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

சிவா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அனானி,
//குஜராத்தில் என்ன நடக்கிறது என தெரிந்து கொண்டு எழுதவும்...குஜராத் இந்து, முஸ்லிம் கலவரமென்பது இன்று நேற்றூ ஏற்பட்டதல்ல..தொன்று தொட்டு நடந்து வந்த ஒன்றுதான்..இந்தக் கலவரங்களை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருந்தது. அதனை மாற்ற முயன்ற குஜராத் பெருவாரி ஹிந்துக்களளின் ஆதரவை பாஜாகா வரிந்து கொண்டு ஆட்சியைப் பிடித்தது.
//
காங்கிரஸ் கட்சி செக்யூலரிஸம் என்ற போர்வையில், minority appeasement செய்வதை நான் மறுக்கவில்லையே ? வன்முறை சரியானது அல்ல என்றே கூறுகிறேன். கண்ணுக்கு கண் என்பது தேசத்தையே குருடாக்கி விடும அபாயம் உள்ளதை வலியுறுத்துகிறேன்.

மோடி சிறந்த நிர்வாகி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது !

நண்பன் said...

பாலா,

உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது.

குஜராத் ஒளிர்கிறது என்று ஆரம்பித்து, பின்னர், ஒரு புள்ளியில் அதன் மீதான அவநம்பிக்கை கொண்டு, கொலை குற்றங்களை நியாயப்படுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்த முனைந்த பொழுதே, தெரிந்து விட்டது மோடி வெற்றி பெறுவார் என்று.

மக்களின் ஏகோபித்த ஆதரவு - நேர்மையான ஆட்சியும், மக்களின் அன்றாடத்தேவைகளை சிரமேற்கொண்டு செய்வது என்ற முனைப்பினாலும் வந்தது தான் என்பதே உண்மை. இது அனைத்து அரசியல்வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

ஆனால் மோடியின் சிறப்புகள் இத்துடன் முடிவடைந்து விட்டன. அப்பட்டமாக, சிறுபான்மை இனத்தவரின் மீது தன் பரிவாரங்களை ஏவிவிட்டது - அந்தக் குற்றச் செயல்களை மூடி மறைப்பதில் முன் நின்றது, எல்லாவற்றிற்கும் மேலாக, தன் வாயாலே அரச கொலைகளை நியாயப்படுத்தியது என தலைமைக்குத் தகுதியற்ற பல பண்புகளைக் கொண்டிருக்கும் அவரை - என்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவரது பாவச் செயல்கள்.

பின் எப்படி இத்தனை ஆதரவு?

கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களைக் கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அதனாலேயே, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் சிறந்த தலைவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

ஆனால், முதலில் அதிகாரம் கைக்கு வரட்டும் - எல்லாரையும் அச்சுறுத்தி அடக்கி வைப்போம். பின்னர், நல்வழிகளைத் தேடும் என்ற 'anti-hero' கதையின் நாயகனாக மோடி இருக்கும் பட்சத்தில், இப்பொழுது அவர் நல்வழியைத் தேடும் கட்டாயத்தில் இருக்கிறார்.

இன்று குஜராத்தில், தனித்தீவாக சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுவிட்டனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. தங்கள் பிழைப்புக்காக, தங்களது இயற்பெயரையே மறைத்துக் கொண்டு, ஹிந்துப் பெயர்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு சிறுபான்மையினர் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்த சூழலையெல்லாம், எவ்வாறு மோடி மாற்றப் போகிறாரென்று தெரியவில்லை. இனி அவரே முயற்சித்தாலும், மக்களிடையே அவர் தோற்றுவித்த பிளவுகளை இணைக்க வைக்க முடியுமா என்பது கேள்விக்குறியதாகவே இருக்கும். அவ்வாறு இணைக்க முடியுமென்றால் - அதற்கான விலை அவருக்கு மிகப்பெரியதாக இருக்கும் - சொந்த சகாக்கள் சிலரையே அவர் பலி கொடுக்க வேண்டியதிருக்கும். அவ்வாறு இணைக்க முடியுமென்றால், அவர் தோற்றுவித்த பிளவுகளை அவரால் கடக்க முடியுமென்றால் - சந்தேகமேயில்லை - அவர் நிச்சயமாக ஒரு சிறந்த தலைவராக வர முடியும்.

இனி வருங்காலத்தில், மோடி கவனிக்கப்படுவார் - எவ்வாறு அவர் மக்களிடையே தோற்றுவித்த அச்சத்தையும், வெறுப்பையும் போக்கப் போகிறார் என்று. அவர் அந்த வழியில் செல்வாரா, இல்லை மீண்டும் மீண்டும், மக்களை பிளவு படுத்தி அதன் மீது தனது பிம்பத்தை எழுப்பிக்கொள்வாரா என்பதை அனைவருமே கவனிப்பர்.

சிறுபான்மை இனத்தவர்கள் சொல்கின்றனர் - 2002 கடந்து செல்ல விரும்புகிறோம். இது ஒரு நியாயமான எதிர்பார்ப்பே.

அதற்காக மோடி மெனக்கெடுத்து, அவர்களுக்கு கரம் கொடுத்து உதவப் போகிறாரா, அல்லது, அவர்களை 2002 கடக்கவே முடியாத அச்சத்தில் உறைய வைக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்து, காலம் அவரைப் பற்றி எழுதும் - அவர் சிறந்த தலைவரா, அல்லது ஹிட்லரை விட மோசமான பாசிஸ்டா என்று.

அவர் 2002 கடந்து தன் மக்களை அழைத்துச் செல்வாரென்றே நம்புவோம். தன் தனிமனித ஆகிருதியில் அவர் பெற்ற வெற்றி, பிஜேபியையும் விட அவர் பெரிதாகிக் கொண்டே போகிறார் என்ற செய்தியை தெளிவாக்குகிறது. குஜராத்தையும் தாண்டி அவர் தேசிய அளவில் வருவதற்கு அவர் முதலில் 2002ஐக் கடக்கட்டும்.

கடப்பார் வெற்றிகரமாக என்று வாழ்த்துச் சொல்வோம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Bala,
Good post.
Some other dimensions are explianed in Dinamani editorial.
Check,
http://sangappalagai.blogspot.com/2007/12/35.html

enRenRum-anbudan.BALA said...

அறிவன்,

தங்கள் பதிவை வாசித்த பின் தான் எனக்கு இதை எழுதவே தோன்றியது :))

வருகைக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

அறிவன்,

தங்கள் பதிவை வாசித்த பின் தான் எனக்கு இதை எழுதவே தோன்றியது :))

வருகைக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

நண்பன்,
தங்கள் விளக்கமான பினூட்டத்திற்கு மிக்க நன்றி.

மோடிக்கு, ஒரு நல்ல முதல்வராக, அனைத்து மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அவர் உணர்ந்தே இருப்பார் என்று நம்புவோம் !

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

டோண்டு சார்,
கருத்துக்கு நன்றி. இது மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை தான் !

சீக்கியர் மேல் நடந்த வன்முறைக்கு காங்கிரஸ் தான் முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது ! அதே சமயம், கம்பேர் செய்வதால் ஒன்றும் ஆகப் போவதில்லையே :(

said...

//மோடி கலவரத்தை ஆதரித்தாரென்றால்- அவர் சார்ந்த கட்சி மற்றும் கொள்கை அது மாதிரி.அவ்ர் ஒன்றும் மறைமுக ஆதரவு கொடுக்கவில்லை.மற்றும் அந்தக் கொள்கை அங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடையது எனில் அதை கேள்வி கேட்க மற்றவர் யார்?
//
கலவரத்தை ஆதரிப்பது ஒரு கொள்கையா ??? அது பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்புடையதா ? அப்ப அங்கே பெரும்பான்மை மக்கள் காட்டுமிராண்டிகளா ???

என்ன மாதிரி வக்கிர சிந்தனை இது :(

jollupandi said...

குஜராத்தில் என்ன நடக்கிறது என தெரிந்து கொண்டு எழுதவும்...குஜராத் இந்து, முஸ்லிம் கலவரமென்பது //


முகம் மூடி , எச்சில் உமிழ்ந்து போயிருக்கும் அனானி அவர்களே.. உங்கள் எழுத்துக்கள் காட்டுகிறது உன் என்னம் எப்படி என்று.. எவ்வளவு வக்கிர சிந்தனை என்று.

said...

Let us hope that this victory is repeated throughout India and
*** EDITED ***
terrorism is curbed in our country.
(Joseph) 10:51 PM

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>>>>>>>>>
அறிவன்,
தங்கள் பதிவை வாசித்த பின் தான் எனக்கு இதை எழுதவே தோன்றியது :))
வருகைக்கு நன்றி.
>>>>>>>>>>>>>>>>
Thanks you.

said...

/// கலவரத்தை ஆதரிப்பது ஒரு கொள்கையா ??? அது பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்புடையதா ? அப்ப அங்கே பெரும்பான்மை மக்கள் காட்டுமிராண்டிகளா ???

என்ன மாதிரி வக்கிர சிந்தனை இது :( ///

இப்படி செளகரியமாக பேசுவதுதான் திரிப்பு வாதம் மற்றும் வக்கிர சிந்தனை.

கலவரத்தை ...கலவரத்தால் எதிர்ப்பது...ஆயுதம் எடுப்பவனுக்கு பதி ஆயுதம் ....அமைதி காப்பவனுக்கு பதில் அஹிம்சை...இதுதான் கொள்கை.

கண்டிப்பாக பெரும்பான்மை மக்கள் காட்டு மிராண்டிகளல்ல..அவர்களுக்கு எது நன்மை பயக்கும் என்று புரிந்துணர்வு கொண்டு அதன் படி செயல்பட்டுள்ளனர்

enRenRum-anbudan.BALA said...

அனானிச் சண்டை போதும் என்று எண்ணுகிறேன் !

ஓகை said...

//அதே நேரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதும் உண்மையே. நேற்று தொலைக்காட்சியில் அம்மக்களில் சிலர் சொன்னதின் சாரம் இது தான்: "நாங்கள் 2002-ஐ மறந்து, முன் நோக்கி வாழவே விரும்புகிறோம். எங்களுக்கு நியாயமும், உரிய நஷ்ட ஈடும் கிடைக்க வேண்டும்". //

குஜராத்தைப் பற்றி நாம் அறிவது அனைத்தும் பெரும்பாலும் ஊடகங்களின் மூலமாக்த்தான். ஆனால் ஊடகங்கள் பொதுவாக மோடியைப் பற்றி மிகுந்த ஒருதலைபட்சமாக எழுதுகின்றன காட்டுகின்றன என்றே நான் கருதுகிறேன். குஜராத்திலிருந்து வருபவர்களைக் கேட்டால் அவர்கள் நல்லவிதமாகவே சொல்கிறார்கள்.

enRenRum-anbudan.BALA said...

ஓகை,
தங்கள் கருத்துக்கு நன்றி.

பொதுவாக, ஊடக வழிச் செய்தி தானே நமக்கெல்லாம் ! இந்த 5 ஆண்டு ஆட்சியில், மோடி (2002-ஐ கடந்து) அனைத்து சாராரையும் அரவணைத்து வழி நடத்திச் செல்வார் என்று எதிர்பார்க்கிறே. மற்றபடி, மோடியை ஹிட்லரோடு ஒப்பிட்டுப் பேசுவது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை !

இந்துத்வா என்பதற்கு விட, இந்த வெற்றி மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு (பெருமளவு) கிடைத்த வெற்றியாகத் தான் தோன்றுகிறது.

எ.அ.பாலா

said...

நம்பிக்கை தரும், இந்த வெற்றி !

நல்லது நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள், ஒரு முதல்வரினுடைய நேர்மையின் வெற்றி; அவருடைய நிர்வாகத் திறனின் வெற்றி. இம்மாதிரி இந்நாட்டில் அடிக்கடி நடப்பதில்லை; இம்முறை இது நடந்திருக்கிறது என்பது திருப்திக்குரிய விஷயம்.

எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்து, மோடியின் தலைமையில் பா.ஜ.க.
இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்தான், இந்த வெற்றியின் முக்கியத்துவம் நமக்குப் புரியும். "சென்ற இடமெல்லாம், பெரும் கூட்டங்களைச் சந்தித்து, பெண்களை எல்லாம் கவர்ந்துவிட்டார்' என்று கூறப்பட்ட
– சோனியா காந்தியின் கடுமையான தாக்குதல்கள்; மோடி மீண்டும் ஆட்சிக்கு
வந்தால், அந்த "மரணத்தின் வியாபாரி' கையில் குஜராத் சிக்கிவிடும் என்று அவர் விடுத்த மிரட்டல்கள்; மிகவும் நல்லவர் என்று எல்லோராலும் அறியப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் தீவிர பிரச்சாரம்; மோடியையும், பா.ஜ.க.வையும் பொய்யர்கள், ஏமாற்றுப் பேர் வழிகள் என்று அந்த நல்லவரே கூறிவிட்ட சூழ்நிலை; பா.ஜ.க.வில் மோடியின் நிர்வாகத்தில் தங்களுக்குப் பயன் கிட்டவில்லை என்பதால், அக்கட்சியை விட்டு வெளியேறி, காங்கிரஸ் வேட்பாளர்களாகவும், சுயேச்சைகளாகவும்
போட்டியிட்டு பா.ஜ.க.வின் ஓட்டுக்களைப் பறித்துவிட முனைந்த, பா.ஜ.க. அதிருப்தியாளர்களின் ஓட்டுப் பிளவு முயற்சிகள்; கோத்ரா ரயில் எரிப்பைத்
தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரங்களும், நிகழ்ந்த கொலைகளும் மோடியினால் நடத்தப்பட்டவை என்று சித்தரிக்க முனைந்த, தெஹல்கா தயாரிப்பு வீடியோ
காட்சிகள்; அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, "மோடி கொலைகாரர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது' – என்று தீர்ப்பளித்து, அவரை தண்டிக்குமாறு குஜராத் வாக்காளர்களை வற்புறுத்திய டெலிவிஷன் சேனல்களின் அவதூறுகள்; "மோடி வெறியர், பா.ஜ.க. மதவெறிக் கட்சி' என்றெல்லாம் கூறி, குஜராத் தேர்தலை
காங்கிரஸுக்குச் சாதகமாக்கி விட, வரிந்து கட்டிக்கொண்டு, தேர்தல் பிரச்சாரத்தில்
இறங்கிய பத்திரிகை உலகம்; பா.ஜ.க.விலேயே இருந்துகொண்டு, மோடியைத் தேர்தலில் வீழ்த்தி, பா.ஜ.க.வை தோற்கடித்து, தன்னுடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சித்த கேசுபாய் பட்டேலின் துரோகம்; அவரும் அவருடைய ஆதரவாளர்களும் உருவாக்கிய ஜாதி ரீதியான பிரச்சாரம்... என்ற பன்முனைத் தாக்குதலைச் சந்தித்து, மோடியும் அவர் தலைமையில் பா.ஜ.க.வும் கண்டுள்ள
வெற்றி இது.

எதனால் இது சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு; அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண் ஜேட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கும் மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத்தன்மை; அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் – இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்.

ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக் கூடிய விஷயம் இந்தத் தேர்தலில்
நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில்
இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க்கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது. வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தும்
– அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற
அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும், மிகக் கடுமையாக முனைந்தும் – ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில், ஒரு மாநில முதல்வர் இப்படிப்பட்ட நேர்மையாளராகத் திகழ முடியும் – என்று நரேந்திர மோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி.

சாதாரணமாக நேர்மையாளராகத் திகழ்பவர்கள், செயல் முனைப்பில் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள் என்பது, நம் நாட்டு அரசியலில் உள்ள ஒரு பலவீனம். ஆனால் மோடி இப்படிப்பட்டவரல்ல; அவருடைய செயல் திறன் வியக்கத்தக்கதாக இருக்கிறது. அரசியல் ரீதியாக, எதிர்ப்பைச் சந்திப்பதிலும் சரி; நிர்வாக ரீதியாக துணிவுடனும், உறுதியுடனும் செயல்படுவதிலும் சரி, அவர் புதிய அத்தியாயங்களையே எழுதி வருகிறார்.

அவருடைய நிர்வாகத் திறனையும் உறுதியையும் காட்ட ஒரு உதாரணம் :
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதை அவர் நிறுத்த முனைந்தபோது, பெரும் எதிர்ப்புக் கிளம்பியது; ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட அவரைக் கடுமையாக எதிர்த்தனர். மோடி, விவசாயிகளிடம், "இலவச மின்சாரம் தந்தால் – அது ஒவ்வொரு தினமும், மின்சார
விநியோகத்திற்கு வசதியான நேரத்தில்தான் உங்களுக்குக் கிடைக்கும்; மாறாக நீங்கள் கட்டணம் செலுத்தி மின்சாரம் பெறுவதாக இருந்தால், அது ஒவ்வொரு தினமும் 24 மணி நேரமும் கிட்டும். எது வேண்டும்? எப்போது வரும், எப்போது போகும் என்று சொல்ல முடியாத இலவச மின்சாரமா? அல்லது எப்போதும் வரும் என்கிற, கட்டணம் செலுத்திப் பெறப்படுகிற மின்சாரமா?' என்று கேட்டார்.

விவசாயிகள், கட்டண மின்சாரத்தையே ஏற்றார்கள்; இலவச மின்சாரம் போயிற்று. அவர்களுக்கு, 24 மணி நேர மின்சார சப்ளை கிட்டியது; ஆனால் சிலர் மின்சாரத் திருட்டில் இறங்கினார்கள். பார்த்தார் மோடி. மின்சாரம் திருடிய ஒரு லட்சம்
விவசாயிகளுக்கு, மின்சார சப்ளை ரத்தாகியது. "ஓட்டு வங்கி' என்று நினைத்து,
அஞ்சி, விவசாயிகள் விஷயத்தில் "வம்பு வேண்டாம்' என்று ஒதுங்கிவிடுகிற
நிர்வாகங்களையே எல்லா மாநிலங்களிலும் கொண்ட நமது நாட்டில் – குஜராத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, மின்சார திருட்டு காரணமாக, மின்சார சப்ளை நின்றது. அவர்கள் தவறை உணர்ந்தனர். நிலைமை சீரடைந்தது. இலவச மின்சாரம் போயிற்று; விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் கிட்டியது. விவசாயிகளுக்குத் திருப்தி; நிர்வாகத்திற்கு வெற்றி. இது மோடியின், நிர்வாக பாணி.

இம்மாதிரி நிர்வாகம் இருப்பதால்தான் – "குஜராத் மிக நன்றாகச் செயல்படுகிற நிர்வாகம் உள்ள மாநிலம்; நிதி நிர்வாகத்திலும் சரி, நீர் நிர்வாகத்திலும் சரி, சமூகத்தில் செய்கிற பணிகளிலும் சரி, முதன்மையாக நிற்கிற மாநிலம் குஜராத்' என்று திட்டக்கமிஷனே – மத்திய காங்கிரஸ் அரசின் கீழ் இயங்குகிற திட்டக்கமிஷனே
– தனது அறிக்கையில் கூறியது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை – சோனியா காந்தியின் தலைமையில் இயங்குவது; மத்திய அமைச்சர்கள் சிலரை உறுப்பினர்களாகக் கொண்டது. அந்த அமைப்பினால் நியமிக்கப்பட்ட குழு, குஜராத்தை "இந்தியாவின் முதல் மாநிலம்' என்று
தேர்ந்தெடுத்தது. "பொருளாதார சுதந்திரம், ஊழலின்மை, அரசின் குறுக்கீடு இல்லாமை, சட்டம் – ஒழுங்கு, மக்கள் வாழ்விற்குப் பாதுகாப்பான சூழ்நிலை, வேலை நிறுத்தத்தினால் தொழில் நஷ்டம் இல்லாமை – ஆகிய பல அம்சங்களிலும், மிக நன்றாகச் செயல்பட்டு, குஜராத் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது' – என்று அந்த அமைப்பு கூறியது.

"ஹிந்துத்துவம் பேசுகிறார்' என்று வர்ணித்து மோடியை வீழ்த்த காங்கிரஸ் முனைந்து வந்தது; அதுவும் பலிக்கவில்லை. ஹிந்துத்துவத்தில் தான் கொண்டுள்ள நம்பிக்கையை மோடி மறைத்ததில்லை; ஹிந்துத்துவம் என்பது, மதரீதியானது அல்ல – என்று
சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது; மக்கள் மனதிலும் இது ஒரு மதவெறி நிலையாகக் காணப்படவில்லை.

நிர்வாகத்திலும், நேர்மையிலும் மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக மோடி திகழ்கிறார். அப்படிப்பட்டவர் பெற்றிருக்கிற வெற்றி, நேர்மைக்குக் கிடைத்துள்ள வெற்றி.

"நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா?' என்று நினைத்து மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க்கொண்டிருக்கிற நம் நாட்டு
அரசியலில் – மோடி பெற்றிருக்கிற வெற்றி, மக்கள் மனதில் நம்பிக்கை துளிர்க்க வழிசெய்யும்.

நண்பன் said...

சோ என்ற பெயரில் எழுதிய நண்பர் எனது பதிவிலும் இதே பின்னூட்டத்தை இட்டிருக்கிறார். மூன்று பகுதிகளாக, அது குறித்துப் பதிலும் எழுதிவிட்டேன். யாருக்காவது, வாசிக்க விருப்பமிருந்தால், https://www.blogger.com/comment.g?blogID=13521814&postID=710003868699007347 இங்கு சென்று படித்துக் கொள்ளவும்.

நன்றி.

enRenRum-anbudan.BALA said...

Cho, naNban,

நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails